பாஜக ஏன் வரவே கூடாது? – முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

MK Stalin: பாஜகவையும், அதிமுகவையும் புறக்கணிப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் இன்னும் 3 தினங்களில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்வு பெறுகிறது.

திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவ்வப்போது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் திமுகவின் சாதனைகள் மற்றும் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்து இணைய வழி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது பாஜக ஏன் வரவே கூடாது? என என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் பிரதமர் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. இது தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம் ஆகும்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும், கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா?.

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்.

வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பாஜகவுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள்.

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். எனவே தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பாஜகவையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அதிமுகவையும் புறக்கணிப்போம். பாசிசத்தை வீழ்த்த, ஜனநாயகத்தையும், தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்