மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி… முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

MK Stalin: ஏழைகளுக்கான அரசு என பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் சிறப்புகளை எடுத்துரைத்து, மத்திய பாஜக அரசை விமர்சித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்தவகையில், தற்போது ஏழைகளுக்கான அரசு என பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என விமர்சசித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் பதிவில், மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி. ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?.

சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள். சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல, ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு? எனவும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்