அனல் பறக்கும் தேர்தல் களம்! முதல்வர் இன்று விழுப்புரத்தில் பரப்புரை!

MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மற்றும் கடலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த சூழலில், திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைவர்களும் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், வரும் தேர்தலில் திமுக 21 இடங்களில் நேரடியாக போட்டியிடும் நிலையில் கூட்டணி கட்சிகள் 19 இடங்களில் போட்டியிடுகிறது. இதனால் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், கடந்த 22ம் தேதி திருச்சியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய, ஒவ்வொரு மாவட்டங்கமாக சென்று வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில், மக்களவை தேர்தலையொட்டி விழுப்புரம் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொள்கிறார். அதன்படி, விழுப்புரத்தில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூரில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரத்தில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக அங்கு பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து பிரச்சார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்