#Breaking:”தமிழகத்தில் யாருக்கும் ஒமிக்ரான் தொற்று இல்லை”- மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்!

சென்னை:வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா தொற்றுதான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 6 பேருக்கு கொரோனா தொற்றுதான் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இல்லை எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:

“தமிழகத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த இரண்டு நபர்கள்,திருச்சியை சேர்ந்த ஒருவர் என வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா தொற்றுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது.முதற்கட்ட தகவலின்படி, அவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று இல்லை.அவர்கள் நல்ல முறையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். எனினும், அவர்களிடம் எடுத்த மாதிரியை மேற்கொண்டு மரபியல் ரீதியான  பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.

குறிப்பாக,தமிழகத்தில் யாருக்கும் ஒமிக்ரான் தொற்று இல்லை, எனவே,மக்கள் இது குறித்து பீதி அடைய வேண்டாம்.இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 7.4 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.அதில் 18 வயது முதல் 44 வயது வரையுள்ளவர்களுக்கு 2.47 கோடி முதல் தவணை தடுப்பூசியும்,45 முதல் 49 வயது வரை உள்ளவர்களுக்கு 1.23 கோடி தடுப்பூசியும்,60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 55 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும்,இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும் மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.