#Breaking:கோடநாடு வழக்கு – நீதிபதி திடீர் பணியிடமாற்றம்! !

நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு  கொலை,கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் விசாரனையில் உள்ள நிலையில்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்தது.

அதன்படி,இந்த வழக்கு தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். அதே சமயம்,கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் உள்பட 202 பேரிடம் விசாரணை என்பது தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து,கோடநாடு எஸ்டேட் பங்களாவில் என்னென்ன இருந்தன என்பதை நன்கு அறிந்தவர் என்பதன் அடிப்படையிலும், பங்களா மேலாளர் நடராஜன் வாக்கு மூலத்தின் அடிப்படையிலும், சசிகலாவிடம் சில தினங்களுக்கு முன்னர் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை இரண்டு நாட்களாக தொடர் விசாரனை நடத்தியது.

இதனையடுத்து,இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை ஜூன் மாதத்தில் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.இந்நிலையில்,கோடநாடு கொலை,கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சை பாபா தற்போது பணியிடமாற்றப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் நிர்வாக காரணங்களுக்காக 58 நீதிபதிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில்,அவர்களில் உதகை மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சை பாபாவும் இடம் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை முதல் கோடநாடு கொலை,கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சை பாபா தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டு தேனி மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து,அவருக்கு பதிலாக உதகை மாவட்ட அமர்வு நீதிபதியாக முருகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.