#BREAKING: கோவை மாவட்ட பாஜக தலைவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

கோவையில் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமியை கைது செய்தது பீளமேடு போலீஸ்.

திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதால் கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார். கைதை தொடர்ந்து கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர். கோவையில் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை பீளமேடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி ஆ.ராசா ஆகியோரை இழிவாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தம ராமசாமி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து த.பெ.தி.க.வினர் போலீசில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புகாரை தொடர்ந்து பீளமேடு காவல்நிலையத்தில் விசாரணைக்கு பிறகு கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார். வன்முறை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் உத்தம ராமசாமி மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்துள்ளது கண்டிக்கத்தகது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக எம்.பி ஆ.ராசாவை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. அவரை கண்டித்ததற்காகக் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்துள்ளது கண்டிக்கத்தகது. மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியவரை கைது செய்யாமல், இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? என கேள்வி எழுப்பி, அடக்குமுறைகளுக்கு என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment