எய்ம்ஸ் மருத்துவமனை…தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதைத்தான் சொன்னார் – எல் முருகன்

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95% முடிந்ததாக ஜே.பி. நட்டா பேசியது குறித்து அமைச்சர் எல்.முருகன் விளக்கம்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்தார். அப்போது, மதுரையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% நிறைவடைந்து உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்றும் கூறியிருந்தார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% நிறைவடைந்ததாக தெரிவித்த ஜே.பி.நட்டாவின் பேச்சிற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் கிளம்பின. எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்திற்கு சென்று மருத்துவமனை பணிகள் எங்கே நடக்கிறது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எய்ம்ஸ் மருத்துவமனை ஆரம்ப கட்ட பணிகள் தான் 95% முடிவடைந்துள்ளதாக ஜேபி நட்டா கூறினார்.

அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர். என்ன சொல்லுகிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வேற்று விளம்பரத்துக்காக அந்த இடத்திற்கு சென்று புகைப்படம் போடுவதை தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டின் மானத்தை காப்பற்றுங்க என தெரிவித்தார். இதன்பின் பேசிய எல் முருகன், திமுக எம்பி ஆ.ராசாவின் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுகவின் மூன்றாம் கட்ட பேச்சாளர்கள் வேற்று விளம்பரத்திற்காக பேசுவதாக நினைத்துக் கொள்ள வேண்டும்.

இந்து மக்களை கீழ்த்தரமாக அவமதிப்பதை மக்கள் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகுட்டுவார்கள். தேர்தல் சமயத்தில் பாஜக வெற்றிவேல் யாத்திரை நடத்தியது. அப்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் பயந்துகொண்டு கையில் வேல் புடித்தார். வாக்குக்காக இந்து மக்களை ஏமாற்றும் செயலை திமுக செய்வதை நிறுத்திவிட்டு, ஆக்கபூர்வமாக, நாடு மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி சிந்திக்க வேண்டும் என கூறினார். மேலும், ராகுல் காந்தி நடைபயணம் ஆரம்பத்திலேயே தோல்வி, அவர் இந்த பயணத்தை தொடங்கிய போதே கோவாவில் காங்., எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து வெளியேறினர். அவர் காஷ்மீர் செல்வதற்குள் காங்., கட்சியே காணாமல் போய்விடும் என்றார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment