அதிமுக ஜெட் வேகத்தில் செல்லும்… எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. – இபிஎஸ்.!

இன்று சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.  இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுரை மாநாடு :

அதற்கு பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.  அவர் பேசுகையில், என்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி. மதுரை மாநகரமே குலுங்கும் அளவுக்கு அதிமுக மாநாடு (கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி) நடைபெற்றது. வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மதுரை மாநாட்டை அதிமுக நடத்தியது. அதிமுக வரலாற்றிலேயே 15 லட்சம் பேர் கலந்து கொண்ட ஒரே மாநாடு மதுரை மாநாடு. எதிரிகள் அஞ்சும் அளவுக்கு மதுரை மாநாட்டை நடத்தியது அதிமுக. வாகனங்கள் கூடுதலாக அனுமதித்திருந்தால் இன்னும் கூடுதலாக 10 லட்சம் பேர் வந்திருப்பார்கள்.

உதயநிதிக்கு தகுதியில்லை :

அந்த மாநாட்டை விமர்சனம் செய்ய உதயநிதிக்கு தகுதி இல்லை.  அரசியல் பத்துக்குட்டியாக இருக்கும் உதயநிதி அதிமுகவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக மாநாட்டை விமர்சித்தார்கள். ஆனால, அங்கு திமுக இளைஞரணி மாநாடு மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு : 2024 தேர்தல்… திமுகவுக்கு கண்டனம்.! அனல் பறந்த 23 தீர்மானங்கள்… 

எம்ஜிஆர் – ஜெயலலிதா :

எந்த கொம்பானாலும் அதிமுகவை அழிக்கவோ ,ஒடுக்கவோ முடியாது. எம்ஜிஆர் இந்த கட்சியை தோற்றுவித்த போது, தீயசக்தி திமுகவை அழிப்பது தான் முதல் கடமை என்று கூறினார்,. அவர் இருக்கும் வரை திமுக எழுந்திருக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு பத்தாண்டு காலம் சிறப்பான ஆட்சியை அவர் கொடுத்தார். அதன் பிறகு புரட்சி தலைவி ஜெயலலிதா பல சோதனைகளை கடந்து 15 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தார்கள்.

எதிரிகளோடு துரோகிகள் :

எதிரிகளோடு கைகோர்த்து துரோகிகளும் அதிமுகவை ஒழிக்க நினைக்கிறார்கள்.  அத்தனை நீதிமன்ற தடைகளையும் வென்று காட்டியுள்ளோம். ஒவ்வொரு பொது கூட்டத்திலும் ஏதோ ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், இன்றைய பொதுக்கூட்டத்தில் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி பொங்குகிறது. நீதிமன்றத்தில் அங்கீகாரம் கிடைத்துவிட்டது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் புறப்படும். இனி அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. அதிக தொண்டர்களை கொண்ட இயக்கம் அதிமுக இயக்கம்.

கொரோனா காலம் :

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், மக்கள் உயிரை அதிமுக அரசு காப்பாற்றியது. அந்த காலகட்டம் மிக மோசமானது. அந்த மோசமான காலகட்டதிலும் சிறப்பாக செயல்பட்டு விலைமதிப்பில்லா உயிர்களை காப்பாற்றிய அரசு அதிமுக அரசு. அனால்,  திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல்கொரோனாவால்  பல உயிர்களை இழந்துள்ளோம்.

அமைச்சருக்கு தண்டனை :

செயலற்று அரசாக திமுக அரசு தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.  ஒரு அமைச்சருக்கு நீதிமன்றத்தில் தகுந்த தண்டனை கிடைத்து உள்ளது  இன்னும் பல திமுக அமைச்சர்கள் நீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்குள் பல பேர் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்திற்கு செல்வார்கள்.

ஐந்து மாதமாக சிறையில் இருந்து கொண்டிருக்கிறார் ஒரு அமைச்சர்.  நீதிமன்றம் கூறியும், சூடு சொரணை இல்லாம்,  இன்று வரை அவரை (செந்தில் பாலாஜி) அமைச்சராக தொடர்ந்து நீதிமன்ற அறிவுரைக்கு மௌனம் காக்கிறது திமுக அரசு. விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த அரசு திமுக அரசு. பயிர் காப்பீட்டுற்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என பல்வேறு விமர்சனங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்து பொதுக்குழுவில் பேசினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.