“நிச்சயமாக நான் சண்டையிடுவேன்” – உக்ரைன் ராணுவத்தில் இணைந்த டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி!

உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி,ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக தனது நாட்டின் ராணுவப் படையில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினின் போர்ப் பிரகடனத்தைத் தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக  தரை,வான் வழியாக ரஷ்யாவின் படையெடுப்பு உக்ரைனை கொடூரமாக தாக்கி வருகிறது. இதனால், உக்ரைன் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

எனினும்,18 முதல் 60 வயது வரையுள்ள உக்ரைன் ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.மேலும்,ரஷ்யாவை எதிர்த்து போரிட பொதுமக்களுக்கு ஆயுதமும் உக்ரைன் அரசு வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி,ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக தனது நாட்டின் ராணுவப் படையில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்:

“எனக்கு இராணுவ அனுபவம் இல்லை,ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் துப்பாக்கியுடன் அனுபவம் உள்ளது.நிச்சயமாக,நான் சண்டையிடுவேன்,நான் திரும்பி வர முயற்சிக்கும் ஒரே காரணம் இதுதான்”,என்று தெரிவித்துள்ளார்.

36 வயதான ஸ்டாகோவ்ஸ்கி, ஒருமுறை உலக தரவரிசையில் 31-வது இடத்தில் இருந்தார் மற்றும் 2013 இல் விம்பிள்டன் சென்டர் கோர்ட்டில் ரோஜர் ஃபெடரரை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.