உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலுக்கும் எதிர்ப்பு!வெங்கய்யா நாயுடுவிடம் நோட்டீஸ் சமர்பிப்பு

மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் , நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்காக, எதிர்கட்சிகளை சேர்ந்த 64 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் 4 பேர் கடந்த ஜனவரி 12ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து, வழக்குகளை அமர்வுகளுக்கு ஒதுக்குவது தொடர்பாக தலைமை நீதிபதி மீது புகார் எழுப்பினர். அதன் பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என சில அரசியல் கட்சிகள் குரல் எழுப்பின. மேலும் நீதிபதி பி.ஹெச்.லோயா மரண வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நேற்று தீர்ப்பளித்தது குறித்து காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்தது.

இந்நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த குழுவினர், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவருவதற்காக நோட்டீஸ் அளித்ததாக, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். தலைமை நீதிபதிக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டுவருவதற்கு 71 எம்.பி.க்கள் கையெழுத்திட்டதாகவும், இதில் 7 பேரின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டதால் 64 எம்.பி.க்களின் கையெழுத்து செல்லுபடியாகும் எனவும் அவர் கூறினார்.

கண்டனத் தீர்மானம் கொண்டுவருவற்கு தேவையான குறைந்தபட்ச எம்.பி.க்களின் எண்ணிக்கையைவிட அதிக ஆதரவு இருப்பதாகவும் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார். நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகளே கருதுவதாகவும் கபில் சிபல் தெரிவித்தார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், முஸ்லீம் லீக் ஆகிய 7 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கண்டன தீர்மான நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் இந்த கண்டன தீர்மான நோடடீசில் கையெழுத்திடவில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment