“மோடி அரசுக்கு சிக்கல்” அடுத்தடுத்து செக் வைக்கும் ஆதாரங்கள் ” விஸ்வரூபம் எடுக்கும் ரபேல்..!!

புதுதில்லி:
ரபேல் போர் விமானக் கொள்முதல் ஊழலில், மோடி அரசு தப்பிக்க முடியாத அளவிற்கு, ஆதாரங்கள் பெருகி வருகின்றன.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், நாட்டின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸை, திட்டமிட்டே வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ இணைக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் ரூ. 40 ஆயிரம் கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட், நாட்டின் பாதுகாப்புக்கான தளவாடங்கள் தயாரிப்பில் 70 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நிறுவனம் எனும்போது, வெறும் 5 லட்ச ரூபாய் முதலீட்டில், ஆரம்பித்து 1 மாதம் மட்டுமே ஆகக்கூடிய ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ எவ்வாறு, ரபேல் விமான ஒப்பந்தத்திற்கு தகுதி பெற்றது என்ற கேள்விகளையும் தலைவர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால், மத்திய பாஜக அரசிடம் தற்போது வரை முறையான பதில் இல்லை.

ஆரம்பத்தில், பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட்-டின் கூட்டு நிறுவனமாக ரிலையன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது தங்களுக்கே தெரியாது; அதற்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று பாஜகவினர் சாதித்தனர்.

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிரான்காய்ஸ் ஹாலண்டே, பாஜக அமைச்சர்களின் கூற்றை உடைத்து நொறுக்கினார். “இந்திய அரசு கூறியதன் அடிப்படையில்தான் பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்தை இணைத்தோம்” என்று உறுதிப்படுத்தினார்.“போர் விமான ஒப்பந்தத்தில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது; எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை” என்று பாஜக அரசின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்தினார்.

இதனால் அடுத்த பொய்யை நோக்கி பாஜக-வினர் தாவினர். ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் அளவிற்கு, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ‘இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ்’ (எச்ஏஎல்) நிறுவனத்திற்கு கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றனர். ஆனால், இதுவும் வெகு சீக்கிரத்திலேயே அவமானப்பட்டது.

“நான்காம் தலைமுறையை சேர்ந்த- 25 டன் எடை கொண்ட ‘சுகோய்-30’ ரக போர் விமானங்களையே, இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனம்தான் தயாரிக்கிறது. அந்த வகையில், ரபேல் விமானங்களையும் எங்களால் தயாரிக்க முடியும்” என்று எச்ஏஎல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுவர்ண ராஜூ பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், வேறுபல கேள்விகளும் மோடி அரசை நோக்கி நீண்டுள்ளன.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு, ரபேல் விமானத் தயாரிப்பில் ஈடுபடும் அளவிற்கான கட்டமைப்பு இருக்கிறதா? எதன் அடிப்படையில் அந்த நிறுவனம் டஸ்ஸால்ட்டின் கூட்டு நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது? என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ இதழில் அஜித் சுக்லா எழுதிய கட்டுரையின் அடிப்படையில், பிரபல வலைத்தளமான பிராட்ஸ்வார்ட் (BROADSWORD) இந்த கேள்விகளை எழுப்பியுள்ளது.“கடற்படைக்குத் தேவையான சிறு கப்பல்களை கட்டுவதற்கு அண்மையில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனமும் விண்ணப்பம் அளித்திருந்தது. ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் போதிய கட்டுமானத் திறன் இல்லை என்று கூறி அதன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. இது வெறும் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம்தான். ஆனால் அதற்கே ரிலையன்ஸிடம் கட்டமைப்பு இல்லை என்று கூறி, இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அவ்வாறிருக்க, 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான யுத்த ஆயுதங்களைத் தயாரிக்கும் திறன் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எங்கிருந்து வந்தது? ரிலையன்ஸூக்கு திறன் இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் எவ்வாறு கண்டறிந்தது?” என்று பிராட்ஸ்வார்ட் கேட்டுள்ளது.
அதேபோல பாதுகாப்புத்துறை சார்ந்த ஒப்பந்தம் ஒன்று ஏபிஜி நிறுவனத்திற்கு மறுக்கப்பட்டதையும் நினைவுபடுத்தியுள்ள பிராட்ஸ்வார்ட், ஏபிஜி நிறுவனத்தின் நிதிநிலை சரியில்லை என்பதே அதற்கான காரணமாக கூறப்பட்டதாகவும், இதைவைத்துப் பார்த்தால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிதிநிலை மட்டும் சிறப்பாகவா இருக்கிறது? என்று வினவியுள்ளது.

சொல்லப்போனால், விஜயா வங்கியிடம் வாங்கிய கடனை ரிலையன்ஸ் கட்ட முடியவில்லை என்றும், அந்த கடன் முழுவதையும் விஜயா வங்கி வராக்கடனாக அறிவித்து விட்டதையும் பிராட்ஸ்வார்ட் சுட்டிக்காட்டியுள்ளது.இந்த வகையில் பார்த்தாலும், மோசமான நிதிநிலையில் இருக்கும் ரிலையன்ஸ்க்கு ரபேல் ஒப்பந்தம் எப்படி வழங்கப்பட்டது? என்ற கேள்வியே எழுவதாகவும் பிராட்ஸ்வார்ட் குறிப்பிட்டுள்ளது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment