1,00.00,000 ரூபாய் இழப்பீடு கேட்டு மறைந்த சுபஸ்ரீயின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் செப்டம்பர் 12ஆம் தேதி, பொறியியல் பட்டதாரி சுபஸ்ரீ அப்பகுதி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த திருமண வாழ்த்து பேனர் சுபஸ்ரீ மேலே விழுந்தது. நிலை தடுமாறி கிழே விழுந்த சுபஸ்ரீ மீது, பின்னால் வந்த லாரி மோதியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையினை ஏற்படுத்தியது. பேனர் வைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என பலர் தங்கள் சார்பாக இனி பேனர் வைக்கப்போவதில்லை என அறிவித்தனர்.
இது தொடர்பாக அதிமுக பிரமுகர் முன்னாள் கவுன்சிலர் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், அவர் கைது செய்யப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சுபஸ்ரீயின் தந்தை ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் சுபஸ்ரீ இறந்ததற்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும், இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு துறையினர் விசாரிக்க வேண்டும் எனவும், பேனர் வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எதிர் மனுதாரராக தமிழக அரசு உள்ளிட்ட 4 பேரை எதிர் மனுதாரராக சேர்த்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.