ஆன்மிகத்தில் அரசியலை கலப்பது ஏற்புடையதாக இருக்காது!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே திருக்குறுங்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் இவ்வாறு தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் வாய்ப்பு கிடைத்தால் பேசுவேன் என்றும் அவர் கூறினார்.
கவர்னர் உரையில் என்ன பேசுகிறார்கள் என்று பார்த்துவிட்டு அதன்படி தான் பேசுவேன் எனக் குறிப்பிட்ட தினகரன், திராவிட ஆட்சியில் ஆன்மீக அரசியல் சாத்தியப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு உலகில் எங்குமே அரசியலுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் கிடையாது என்று தெரிவித்தார்.
ஆன்மீகம் என்பது மதம் சம்பந்தப்பட்டது என்று கூறிய தினகரன், எனவே அரசியலுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம்  கிடையாது என்றும், அரசியல்வாதிகள் மத நம்பிக்கைகள் குறித்து பேசாமல் இருந்தாலே போதும் என்று தெரிவித்தார்.
மதத்தை கையில் எடுத்து மக்களை பிரிக்காமல் இருந்தாலே பாதி பிரச்சனைகள் முடிந்துவிடும் என்றுக் கூறிய டிடிவி தினகரன், பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்கத்தான் வேண்டுமே தவிர எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்ற கூடாது என்றும் குறிப்பிட்டார்.
தன்னைப் பொறுத்தவரை ஆன்மீக அரசியலுக்கு அர்த்தம் என்ன என்று தெரியவில்லை என்றுக் கூறிய தினகரன், ஆன்மீகம் அரசியலில் கலக்கக் கூடாது என்றும், இது தேவையில்லாத பிரச்சனைகளை உண்டாக்கும் என்றும் தெரிவித்தார்.

Leave a Comment