ஐபிஎல் போட்டிக்கு ஒரு நியாயம்?சினிமாவிற்கு ஒரு நியாயமா?காவிரி நீர் வரும்வரை திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா?உதயநிதி

‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா?’ என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் இளைஞர்களின் கவனம் திசைதிரும்பிவிடும் என்று எதிர்ப்பு கிளம்பியது. தீவிர எதிர்ப்புக்குப் பின்னர், ஐபிஎல் போட்டிகள் சென்னையில் இருந்து புனேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

இந்நிலையில், ஐபிஎல் போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின்.

“ஐபிஎல் போட்டிகள் போல், தமிழ்நாட்டில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை ஒத்திவைக்கப்படுமா? செயல்படாத மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே…” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

திரைத்துறையில் இருந்த பிரச்சினைகள் காரணமாக, கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து புதுப்படங்களின் ரிலீஸை நிறுத்தி வைத்திருந்தது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக உடன்படிக்கை ஏற்பட்டதைத் தொடர்ந்து, விரைவில் படங்கள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உதயநிதியின் இந்தக் கருத்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment