பரபரப்பான சூழல்…இன்று பெரும்பான்மையை நிரூபிப்பாரா மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே?..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து, உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து,மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றார்.மேலும்,பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார்.

இந்த சூழலில்,மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.அதேசமயம்,மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகர் பதவி ஒரு ஆண்டுக்கும் மேலாக காலியாக இருந்த நிலையில், அப்பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.அதன்படி,சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேகரும்,அதே சமயம்,மகாவிகா அகாதி கூட்டணி சார்பில் சிவசேனாவின் ராஜன் சால்வி ஆகியோர் நேரிடையாக போட்டியிட்ட நிலையில்,வாக்கெடுப்பு நடைபெற்றது.அதில்,164 வாக்குகள் பெற்று மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில்,மகாராஷ்டிராவில் இன்று நடைபெறும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.அதன்படி, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று ஏக்நாத் ஷிண்டேவின் புதிய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.சட்டமன்றத்தின் பலம் 288 ஆக உள்ள நிலையில்,பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.மேலும்,புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு சுமார் 50 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக கூறப்படும் நிலையில்,மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு பெரும்பான்மையை பொருத்தமட்டில் 145 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருந்தால் போதுமானதாக கூறப்படுகிறது.எனவே,இன்று பேரவையில் ஏக்நாத் சிண்டே பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில்,கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment