மத்திய பட்ஜெட்டில் மாணவர்களுக்கான அறிவிப்பு என்னென்ன?

இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு.

2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இளைஞர்கள், பெண்கள், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும் என்றும் தெரிவித்தார். அதில்,  மேக் இன் இந்தியா திட்டம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் உருவாக்கப்படும் எனவும் அறிவித்தார்.

மாணவர்களுக்கு அனிமேஷன், VFX, டிஜிட்டல் விளையாட்டுகள் தயாரிப்பு ஆகியவற்றில் திறனை மேம்படுத்த திட்டங்களை வடிவமைக்க சிறப்புக்குழு அமைக்கப்படும். இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும். ஊரக மாணவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி, கோவிட் பாதிப்பு காரணமாக இரண்டு வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளதால் புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்களை உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சிகள் மூலமாக கல்வி முறையை செயல்படுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக 200 சேனல்கள் உருவாக்கப்படும். அதன்படி, 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு மாநில மொழிகளில் பாடம் நடத்த 200 டிவி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும். ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி என்ற திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகின்றது என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார். மேலும், 5 உயர்கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்த ரூ.1250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கபப்பட்டுள்ளது.

author avatar
Castro Murugan