அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்தும் வரை தொடர்ந்திடுவோம் – மு.க. ஸ்டாலின்

முதல் நாளில் பெற்ற வெற்றியின் தொடக்கத்தை, தமிழகத்தைப் பாழாக்கியிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்தும் வரை தொடர்ந்திடுவோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,“அ.தி.மு.க.வை நிராகரிப்போம்” என்ற தீர்மானத்தை முன்னிறுத்தி, 200 தொகுதிகளின் வெற்றி இலக்குடன், 16 ஆயிரம் ஊராட்சிகள் – வார்டுகளில் நடைபெறும் கிராம/வார்டு சபைக் கூட்டங்களின் தொடக்க நாளான  டிசம்பர் 23-ஆம் தேதி அன்று , பொதுமக்களின் பெரும் வரவேற்புடன் காஞ்சிபுரம் (வடக்கு) மாவட்டம் திருப்பெரும்புதூர் (தெற்கு) ஒன்றியம், குண்ணம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றேன்.

விடியலுக்கான தொடக்கப்புள்ளியாகவும், வீணர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளியாகவும் அமைந்துள்ள இந்த கிராம/வார்டு சபை கூட்டங்களின் வெற்றிக்கு அச்சாரமாக அமைந்திருப்பது மக்கள் தந்த மனமார்ந்த பேராதரவாகும். அந்த ஆதரவு நீடித்திடவும், நிலைத்திடவும் ஜனவரி 10 வரை தொடர்ந்து பயணிக்க வேண்டியது கழகத்தினரின் கடமையாகும். 16ஆயிரம் ஊராட்சிகள் – வார்டுகளிலும் கிராம/வார்டுசபைக் கூட்டங்களை முழுமையாக நடத்தி, மக்களின் குறைகளைக் கேட்டிட வேண்டும்.
அ.தி.மு.க.வை நிராகரிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை அவர்களிடம் துண்டறிக்கைகள் வாயிலாகவும், திண்ணைப் பிரச்சாரமாகவும் எடுத்துரைக்க வேண்டும். உங்களில் ஒருவனாக நானும், மக்களோடு இணைந்து நாமும் தொடர்ச்சியாகப் பயணிப்போம். நம்மை விட ஆர்வமாக உள்ள அவர்களின் ஆட்சி மாற்றக் கனவை நிறைவேற்றுவோம். கிராம/வார்டுசபைக் கூட்டங்களின் முதல் நாளில் பெற்ற வெற்றியின் தொடக்கத்தை, தமிழகத்தைப் பாழாக்கியிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்தும் வரை தொடர்ந்திடுவோம்! முதல் நாள் வெற்றி, முழுமையான வெற்றி; இந்த வெற்றி, தொடர்ந்து எப்போதும் நம்முடையதே.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.