அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் ..! ஈராக் செல்ல வேண்டாம் -மத்திய அரசு எச்சரிக்கை

  • அமெரிக்கா மற்றும் ஈரான் போர் பதற்றம் நிலவி வருகிறது. 
  • ஈராக்கில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருங்க மத்திய அரசு எச்சரித்துள்ளது. 

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ,அமெரிக்க படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ,ஈராக் ராணுவ துணை தளபதி அபு மகதி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலால் ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே போா் ஏற்படும் அபாயம் உள்ளது.ஈரான் நாடாளுமன்றத்தில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை தீவிரவாத அமைப்பாக மசோதா நிறைவேற்றப்பட்டது.இந்த பதற்றமான சூழலில் ஈரான் ராணுவம்,  ஈராக்கில்  உள்ள அமெரிக்க விமானப் படைத்தளமான  அல் அசாத் பகுதியில் இருந்த படைதளத்தின் மீது  ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலை  பெண்டகனும் உறுதி செய்த நிலையில்,தங்கள் நாட்டு படைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஈராக்கிற்கு பயணம் மேற்கொள்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து இயங்கும் என்றும்  ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்கு தூதரக உதவிகள் உடனடியாக செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானங்கள் ஈரான் ,ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் மறு உத்தரவு வரும் வரை, இந்தியர்கள் எந்தவித அத்தியாவசிய தேவையில்லாமல் ஈராக் நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.