15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி – மத்திய அரசு இன்று ஆலோசனை!

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்கள்,சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.

வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும்,முன்களப் பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் பிரதமர் மோடி கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து,நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு https://www.cowin.gov.in/  என்ற இணைய தளத்தில் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.

அதன்படி, CoWIN இணையதளத்தில் முன்பதிவு செய்யும்போது ஆதார் கார்டு இல்லாதவர்கள் 10 ஆம் வகுப்பு ஐடி கார்டை பயன்படுத்தி தடுப்பூசிக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில்,15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு இன்று காலை ஆலோசனை நடத்தவுள்ளது.அதன்படி,அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை நடத்துகிறார்.

மேலும்,இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.