தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துக்கு பல தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய நிலையில், தனது இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன், அண்மையில் முதல்வரிடம் தாக்கல் செய்தாா். விசாரணை ஆணையத்தின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், விசாரணை நிறைவடையாததால் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி  22-ஆம் தேதி வரை (அதாவது மேலும் ஆறு மாதம்) நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கு முன்பாக விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டதால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 29-வது கட்ட விசாரணையை இன்று தொடங்கவுள்ளது. இதனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

author avatar
murugan