இது ரவுடித்தனத்தின் உச்சக்கட்டம் – விராட் கோலி ட்வீட்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நடைபெற்றவை ரவுடித்தனத்தின் உச்சக்கட்டம் என்று இந்திய அணி வீரர் விராட் கோலி ட்வீட்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்களான சிராஜ் மற்றும் பும்ராவை இன ரீதியாக அங்குள்ள ரசிகர்கள் இழிவுப்படுத்தியதை தொடர்ந்து ஆட்டம் முடிந்த பின், ரஹானே, அஷ்வின், போட்டியின் அம்பேரிடம் புகார் அளித்தனர். மேலும், சிட்னி மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடமும் புகாரளிக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று 3வது டெஸ்ட் போட்டியில் 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணி பந்துவீசி கொண்டிருக்குபோது, சில ரசிகர்கள் மீண்டும் இனவெறியை தூண்டும் வகையில் கூச்சலிட்டதால் சிராஜ் திடீரென பந்துவீச்சை நிறுத்தினார். இதன் காரணமாக 3வது டெஸ்ட் போட்டி 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே, பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்திருந்தது.

பின்னர், இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்திய வீரர்களை குறிவைத்து இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து இந்திய வீரர் விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், இனவெறி தாக்குதலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று. பவுண்டரி லைனில் பல நிகழ்வுகளை சந்தித்துள்ளோம். ஆனால், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நடைபெற்றவை ரவுடித்தனத்தின் உச்சக்கட்டம். இதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்