தன் மீது மத்திய சட்டத்தின் கீழ் வழக்குகள் இல்லை.! இந்த விடுதலை மகிழ்ச்சி தருகிறது.! நளினி பேட்டி.!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேரையும் விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து நளினி மகிழ்ச்சி. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த மே மாதம் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பளித்தது. இதனையடுத்து, தங்களையும் பேரறிவாளனை போலவே விடுதலை செய்ய வேண்டும் என நளினி, ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த நிலையில், அவர்களையும் இன்று விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிசந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேர் நன்னடத்தை, சிறையில் கல்வி கற்றது, பரோல் விதிமுறை, ஆளுநரின் தாமதம் ஆகியவற்றின் அடிப்படையில் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நளினி, 6 பேரும் சிறையில் இருந்து விடுதலையானது மகிழ்ச்சி தருகிறது. பேரறிவாளனின் விடுதலையின்போதே, தாமும் விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. 32 வருட சிறைவாசத்தில் இருந்து 6 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டு உள்ளோம். தன்மீது மத்திய சட்டத்தின் கீழ் வழக்குகள் இல்லை, 302, 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டிருந்தது என தெரிவித்தார்.

இதனிடையே, 6 பேர் விடுதலை செய்யப்பட்ட தகவல் நளினியின் தாயார் பத்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நளினியின் தாய் பத்மா கூறுகையில், 7 பேரில் ஒரே ஒரு பெண்ணாக துயரங்களை அனுபவித்த நளினி விடுதலை செய்யப்பட்டுள்ளார். நளினியின் விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. இந்த ஆறு பேரும் அனைவருக்கும் ஒத்துழைப்பு கொடுத்து நல்ல முறையில் இருப்பார்கள் என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment