பரூக் அப்துல்லா விடுவிப்பு -திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு

பரூக் அப்துல்லா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவரை விடுவிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.எனவே ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு மேலாக வீட்டுக்காவிலில் இருந்த பரூக் அப்துல்லா இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், பரூக் அப்துல்லா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.மேலும் தடுப்புக் காவலில் உள்ள உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.