சீனாவில் அடுத்த கொரோனா தடுப்பூசி தயார் – 79.3 சதவீதம் செயல்திறன் மிக்கது என உறுதி!

சீனோபார்ம் நிறுவனத்தின் இரண்டாவது தடுப்பூசி சீனாவில் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடுப்பூசி 79.3 சதவீதம் செயல் திறன் உள்ளது என சீனோபார்ம் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவிலிருந்து பிற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது சீனாவின் குறைந்து இருந்தாலும், மற்ற நாடுகளில் தனது வீரியத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸை தடுப்பதற்கான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் ஆய்வகங்களில் கண்டறியப்பட்டு கொண்டிருக்கிறது. பல இடங்களில் அவசரகால பயன்பாட்டிற்கான தடுப்பூசிகளும் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சீன அரசுக்கு சொந்தமான சீனோபார்ம் நிறுவனம் உள்ளிட்ட பல மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன.

அதில் சீனோபார்ம் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இரண்டு பிரிவுகளில் தனித்தனியாக இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டது. அதில் ஏற்கனவே பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்ட ஒரு தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 86% செயல்திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டு, அவசர தேவைக்கு பயன்படுத்தலாம் என ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சீன நிறுவனத்தின் இரண்டாவது தடுப்பூசி உகான் நகர பிரிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்பொழுது நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 79.3 சதவீதம் செயல் திறன் உடையதாக இருக்கிறது என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனோபார்ம் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal