#Breaking:ஸ்டெர்லைட் கழிவுகளை விற்க -உயர்நீதிமன்றம் தடை..!

தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த காந்திமதிநாதன் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.அம்மனுவில்,”தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை தாலுகாவில் உப்பாற்று ஓடை உள்ளது.இந்த ஓடைக்கு அருகே ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 2016 அக்டோபர் மற்றும் 2015 நவம்பர் மாதங்களில் உப்பாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது குமரகிரி பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை ரசாயன கழிவுகள் ஓடையில் கொட்டப்பட்டிருப்பதால் தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.எனவே,ஆலைக் கழிவுகளை ஓடையில் கொட்டுவதை  தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”,என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,உப்பாற்று ஓடையில் கொட்டபட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் காப்பர் கழிவுகளை 8 வாரத்தில் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்துவைத்தனர்.

இந்நிலையில்,இந்த உத்தரவை செயல்படுத்த கோரிய வழக்கை மீண்டும் விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள்,உப்பாற்று ஓடையில் தனியார் இடத்தில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்க  தடை விதித்தும்,உப்பாற்று ஓடையில் கழிவுகளை கொட்டியது யார்? என்றும்,ஓடையில் கொட்டப்பட்ட கழிவுகள் ஆபத்தை விளைவிக்கக்கூடியதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும்,இதுகுறித்து 12 வாரங்களில் பொதுப்பணித்துறை செயலாளர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.