” போதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க முதலமைச்சர்  உத்தரவிட வேண்டும்”- மு.க. ஸ்டாலின்

“விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை எவ்வித உச்சவரம்பும் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவும் , போதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும் முதலமைச்சர்  உத்தரவிட வேண்டும்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித உச்சவரம்பும் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவும்; அதற்கு ஏற்றவாறு அனைத்து இடங்களிலும் தேவையான எண்ணிக்கையில் நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும் முதலமைச்சர் திரு. பழனிசாமி உத்தரவிட வேண்டும்”.
“கொள்ளிடம் பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால், 50 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்” என்றும்; “ எந்த ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், 1000 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்வதில்லை” என்றும்; தினமும் விவசாயிகள் அனுபவிக்கும் தீராத இன்னல்களை, “வினோத விவசாயியின்” அ.தி.மு.க. அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
விவசாயிகளும் – விவசாயமும்தான் தமிழகத்தைத் தாங்கி நிற்கும் முக்கியத்தூண்கள் என்பதை இப்போதாவது உணர்ந்து – ஏற்கனவே அறிவித்துள்ள விலையை மறுபரிசீலனை செய்து – நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3000 ரூபாய் கிடைக்கும் அளவிற்கு – குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திட வேண்டும்; நெல் விலையில் எந்தவிதக் கழிவும் செய்திட அனுமதிக்கக் கூடாது; என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.