“திரும்ப வந்துட்டேனு சொல்லு” – ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார், மருமகன், மகள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை மார்ச் 11 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

ஜாமீன் மறுப்பு:

இதற்கிடையில், நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் வழங்க செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்:

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. திருச்சியில் இரண்டு வாரம் தங்கியிருந்து ஜெயக்குமார் காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை வழங்கியது. ஏற்கனவே திமுக தொண்டரை தாக்கியவழக்கு,  சாலை மறியல் வழக்குகளில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

சிறையில் இருந்து வெளியே வந்தார்:

3 வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததால் விரைவில் சிறையிலிருந்து ஜெயக்குமார் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில்,3 வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததால் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அவரை அதிமுகவினர் ஏராளமானோர் வரவேற்று தோளில் தூக்கி வைத்து உற்சாகம் அடைந்துள்ளனர்.இதனையடுத்து,சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் இரண்டு வாரம் தங்கியிருந்து அவர் கையெழுத்திடவுள்ளார்.

பொய் வழக்கு:

இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: “அதிமுகவை அழிக்க திமுக அரசு பொய் வழக்கு போடுகின்றது.அந்த வகையிலே,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை தடுத்த என்மீதும் பொய் வழக்கு போட்டுகைது செய்தது” என்றார்.