தமிழக பாஜக நிர்வாகிகள் தொடர் கைது.! ஆய்வு செய்ய குழு அமைப்பு.!

தமிழகத்தில் நேற்று முன்தினம் தமிழக பாஜக முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு அவருக்கு வரும் நவம்பர் 3ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை , பனையூர் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டருகே பாஜக கொடி கம்பம் வைப்பது தொடர்பான விவகாரத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட புகார் தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

நேற்று தூத்துக்குடியை சேர்ந்த பாஜக நிர்வாகி ஜான் ரவி, சமூக வலைத்தளத்தில் முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக கூறி அவர் மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று தூத்துக்குடி பாஜக நிர்வாகி ஜான் ரவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதற்கு முன்னரும், சர்ச்சை கருத்துக்கள் கூறியதாக மேலும் சில பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்ட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ள பாஜக தேசிய தலைமை புதிய குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவானது  தொடர்ச்சியாக எந்த காரணத்திற்காக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுகிறார்கள் என ஆய்வு செய்து கட்சி தலைமைக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

அந்த குழுவில் முன்னாள் கர்நாடக முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சதானந்த கவுடா, எம்பியும், மும்பையின் முன்னாள் காவல் கண்காணிப்பாளருமான சத்ய பால் சிங், ஆந்திரா பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி, எம்பி  பி.சி. மோகன் ஆகியோர் உள்ளனர். இந்த குழு பற்றிய விவரத்தை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டு இருந்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.