#SAvIND: ஒருநாள் தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்கா, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.  இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பார்ல் மைதானத்தில் நடைபெற்றது. இன்று மதியம் தொடங்கிய இப்போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 85 ரன்கள், கேஎல் ராகுல் 55 ரன்கள் மற்றும் ஷர்துல் தாக்கூர் 40* ரன்கள் அடித்தனர்.

தென்னாபிரிக்கா பந்துவீச்சை பொறுத்தளவில் அதிகபட்சமாக தப்ரைஸ் ஷம்சி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 288 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணியின் தொடக்க வீரர்களான ஜனனிமான் மாலன், குயின்டன் டி காக் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். சிறப்பாக விளையாடி வந்த டி காக் 66 பந்துகளில் 78 ரன்கள் அடித்து அவுட்டானார். இவரைத்தொடர்ந்து, மாலனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தேம்பா பாவுமா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் ஜனனிமான் மாலன் 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மாலனை தொடர்ந்து தேம்பா பாவுமா 35 ரன்களில் யுஸ்வேந்திர சாஹல் பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன்பின்னர் வந்த ஐடன் மார்க்ராம், ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் அணி வெற்றி பெற வழிவகை செய்தனர்.  ஐடன் மார்க்ராம் 37*,  வான் டெர் டஸ்ஸன் 37* ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியாக தென்னைப்பிரிக்கா அணி 48.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று, தொடரையும் கைப்பற்றியது.

கடந்த ஜன.19-ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பந்துவீச்சை பொறுத்தளவில் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஏற்கனவே, 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி, ஒருநாள் தொடரையும் கைப்பற்ற தவறியுள்ளது. வரும் 23-ஆம் தேதி இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நியூலேண்ட்ஸ், கேப் டவுன் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்