#SAvIND: முதல் டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்படி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது.

சூப்பர்ஸ்போர்ட் பார்க், செஞ்சுரியன் நடைபெற்று வரும் இப்போதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னின்னிஸில் இந்திய அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 123, மயங்க் அகர்வால் 60 மற்றும் ரஹானே 48 ரன்கள் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா அணியில் லுங்கி இங்கிடி 6, ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் முகமது ஷமி 5, பும்ரா, ஷர்துல் தாக்கூர் தலா 2 வீழ்த்தினர்.

பின்னர், தனது 2-வது இன்னிங்ஸை 130 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கிய நிலையில், இந்திய அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக தென்னாபிரிக்கா அணிக்கு 305 ரன்கள் வெற்றி இலக்காக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. 305 ரன்கள் இலக்குடன் நேற்று மீதம் இருந்த நேரத்தில் தனது 2-வது இன்னிங்ஸை தென்னாபிரிக்கா அணி தொடங்கியது.

நேற்றைய ஆட்ட முடிவில் தென்னாபிரிக்கா 94 ரன்னிற்கு 4 விக்கெட்டை இழந்து இருந்தது. இந்நிலையில், இன்றைய கடைசி நாளில் ஆட்டத்தில் இன்னும் 211 ரன்கள் அடித்தால் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி என்ற முனைப்புடன் களமிறங்கியது. ஆனால், இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாபிரிக்கா அணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

இறுதியாக தென்னாபிரிக்கா அணி 68 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா அணியை பொறுத்தளவில் டீன் எல்கர் 71, தேம்பா பாவுமா* 35 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி தலா 3, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மேலும், செஞ்சுரியன் மைதானத்தில் தனது முதல் டெஸ்ட் வெற்றியை இந்தியா பதிவு செய்தது. செஞ்சுரியனில் வரலாறு படைத்த இந்தியா – 2021-ஆம் ஆண்டை வெற்றியுடன் நிறைவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்