“ரஷ்யாவிடமிருந்து இனி கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை” – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு

உக்ரேனில் தொடர்ந்து ரஷ்யாகடுமையான தாக்குதலை நடத்தி  வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.எனினும்,உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றி வருகிறது.ரஷ்யா போர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள்  கூறி வந்தாலும்,அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறது.

ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உக்ரைனில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.இந்த தாக்குதலுக்கு பயந்து சொந்த நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அதிகமானோர் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி,அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இறக்குமதியை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதனை தொடர்ந்து, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில்,ரஷ்யாவிடமிருந்து இனி கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

மேலும்,ரஷ்யாவின் கச்சா எண்ணெய்,எரிவாயு ,நிலக்கரியை அமெரிக்க துறைமுகங்களில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாகவும் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இதனிடையே,உக்ரைனுக்கு ரஷ்ய தயாரிப்பான போர் விமானங்களை வழங்க போலந்தின் முன்மொழிவை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

அதே சமயம்,குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மூலப்பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வதை தடை செய்யும் ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.