பெகாசஸ் ஸ்பைவேர் என்றால் என்ன? அது தொலைபேசிகளை எவ்வாறு ஹேக் செய்கிறது?

பெகாசஸ் ஸ்பைவேர் குறித்தும் ,அது மொபைல்போன்களை எவ்வாறு ஹேக் செய்கிறது? என்பது குறித்தும் காண்போம்.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ (NSO) குழுமத்தில் பெகாசஸ் ஸ்பைவேர் இந்தியர்களை உளவுப் பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியாவில் பெரும் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்தியாவில் சுமார் 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹேக் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் பலர் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

அதிலும் குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ்பிரஹ்லாத் படேல் மற்றும் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மே 17, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை புகார் அளித்த உச்ச நீதிமன்றப் பெண் ஊழியர்  உட்பட அவரின் குடும்பத்தினர் 11 பேர், பீமா கோரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்களின் செல்போன்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின.

இதற்கு முன்னர், பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உலகம் முழுவதும் 121 இந்தியர்கள் உட்பட 1,400 முக்கிய நபர்களின் மொபைல்போன் உளவு பார்க்கப்பட்டதாக கடந்த 2019 ஆம் ஆண்டு தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்:

இது தொடர்பாக பேசிய பிரசாந்த் கிஷோர்:”என் செல்போனை 5 முறை மாற்றிவிட்டேன். ஆனால், அதனால் எந்த பயனுமில்லை, ஏனெனில் ஹேக் செய்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த 2017 லிருந்து 2021 வரை எனது போனை யாரோ உளவு பார்க்கிறார்கள் என சந்தேகம் இருந்தது. ஆனால், ஹேக் செய்துள்ளதை என்னால் உணர முடியவில்லை”, எனக் கூறினார்.

prasanth kishor

பிரசாந்த் கிஷோர் கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வர முக்கிய பங்கு உண்டு. பின்னர், அமித் ஷாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரசாந்த் கிஷோர் பாஜகவுடனான தொடர்பை முறித்து கொண்டார். இப்போது பாஜக எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் உத்திகளை வழங்கி வருகிறார். நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணமூலும், தமிழகத்தில் திமுகவும் வெற்றி பெற பிரசாந்த் கிஷோரின் வியூகம் பெரிதும் உதவியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு, பல முக்கிய நபர்களின் மொபைல்போன்களை ஹேக் செய்து உளவு பார்க்கும் பெகாசஸ் ஸ்பைவேர் குறித்து காண்போம்.

பெகாசஸ் என்றால் என்ன:

பெகாசஸ் என்பது ஒரு ஹேக்கிங் சாப்ட்வேர் (மென்பொருள்) – அல்லது ஸ்பைவேர் ஆகும். இது முதலில் இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ குழுமத்தால் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு உருவாக்கப்பட்டது. தற்போது விற்பனை படுத்தப்படுகிறது எனினும், இது உரிமம் பெற்றது. இது iOS மற்றும் ஆண்ட்ராய்டு (Android) உள்ளிட்ட பில்லியன் கணக்கான மொபைல் போன்களை பாதிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

எவ்வாறு பரவுகிறது:

2016 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட பெகாசஸின் ஆரம்ப பதிப்பினால், பாதிக்கப்பட்ட மொபைல்போன்களில், எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல்களில் வந்த தீங்கிழைக்கும் இணைப்பைக் கிளிக் செய்வதினால் பரவியது. ஆனால், தற்போது, NSO இன் தாக்குதல் திறன்கள் மிகவும் மேம்பட்டவை. “பூஜ்ஜிய-கிளிக்” தாக்குதல்கள் என்று அழைக்கப்படுவதன் மூலம் பெகாசஸ், மொபைல்போன் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அதனை உளவு பார்க்கிறது.

இதனையடுத்து,1,400 க்கும் மேற்பட்ட மொபைல் போன்களுக்கு தீம்பொருளை அனுப்ப NSO இன் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக 2019 ஆம் ஆண்டில் வாட்ஸ் அப் வெளிப்படுத்தியது. அதன்படி, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மொபைல் போனிற்கு ஒரு வாட்ஸ்அப் கால் செய்வதன் மூலம், அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை என்றாலும் தீங்கிழைக்கும் பெகாசஸ் குறியீட்டை சம்மந்தப்பட்ட மொபைல் போனில் நிறுவ முடியும்.

மிக சமீபத்தில் ஆப்பிளின் iMessage மென்பொருளில் உள்ள பாதிப்புகளை NSO பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன்காரணமாக, இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்க தனது மென்பொருளை தொடர்ந்து புதுப்பித்து வருவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. எனினும், தற்போது வரை ஆப்பிள் ஐபோன்கள் தான் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

என்ன நடக்கும்:

பொதுவான பயன்பாடுகளில் உள்ள ஆப் மூலம் அல்லது தீங்கிழைக்கும் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் பெகாசஸ் மொபைல்போன்களில் நிறுவப்படுகிறது. அவ்வாறு, ஒரு முறை நிறுவப்பட்டால் மொபைல் போன் மூலம் நமது இருப்பிடம், கால் ரெக்கார்டு, எஸ்எம்எஸ், புகைப்படம், வீடியோ போன்ற முழு தகவல்களையும் ஹேக் செய்ய முடியும். மேலும், மொபைல் போனில் உள்ள கேமரா மூலம் 24 மணிநேரமும் நமது ஒவ்வொரு செயல்பாடும் கண்காணிக்கப்படும்.

hackers

பெகாசஸ் தாக்குதலை எவ்வாறு தடுக்கலாம்:

பெரும்பாலான மக்கள் இந்த வகை தாக்குதலால் குறிவைக்க வாய்ப்பில்லை என்றாலும், பெகாசஸ் மற்றும் பிற தீங்கிழைக்கும் தாக்குதல்களுக்கான வெளிப்பாட்டைக் குறைக்க எளிய வழிமுறைகள் உள்ளன. அதன்படி,

  • பெகாசஸிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஓஎஸ் மற்றும் மொபைல் பயன்பாடுகளை அப்டேட் செய்வது அவசியம்.
  • பயனர்கள்  தங்களுக்கு யாரென்று தெரியாதவர்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல்களில் அனுப்பப்பட்ட இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். இதேபோல தெரியாத நபர்களிடமிருந்து வரும் இணைய அழைப்புகளை தவிர்க்க வேண்டும்.
  • பெகாசஸினால் பாதிக்கப்பட்டவராக நீங்கள் இருந்தால், அதிலிருந்து விடுபடுவதற்கான வழி அனைத்து பயன்பாடுகளையும் நீக்கி அந்த  மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்று உலகின் முதல் ஒருங்கிணைந்த நெட்வொர்க் பாதுகாப்பு நுழைவாயில் வைஜங்கலின்(WiJungle) தலைமை நிர்வாக அதிகாரி கர்மேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.