“நானும் பிராமணன்தான்” – சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் ரெய்னா …!

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் காணொலி மூலமாக பேசிய சுரேஷ் ரெய்னா,நானும் பிராமணன் என்று நினைக்கிறன் என்ற கருத்தை தெரிவித்ததால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 5-ஆவது சீசன் டி 20 போட்டிகள் கடந்த ஜூலை 19 ஆம் தேதியன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.கொரோனா காரணமாக ரசிகா்கள் இல்லாமல் முதல் முறையாக டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெற்றது.மேலும்,இப்போட்டிகள் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

டிஎன்பிஎல் முதல்நாள் ஆட்டம்:

அதன்படி,முதல் நாளன்று நடைபெற்ற லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டியின் நேரலையில், காணொலியின் மூலமாக பேச இந்தியாவின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா அழைக்கப்பட்டார்.

அப்போது,ஒரு கிரிக்கெட் வர்ணனையாளர் சென்னை கலாச்சாரத்தை நீங்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டீர்கள் என்று ரெய்னாவிடம் கேட்டார். ஏனெனில் அவர் வேட்டி அணிவது,நடனம் மற்றும் விசில் அடிப்பது போன்ற கலாச்சாரத்தை பின்பற்றுவதால் இவ்வாறு கேட்பதாக வர்ணனையாளர் கூறினார்.

நானும் பிராமணன்:

அதற்கு பதிலளித்த ரெய்னா,”நானும் பிராமணன் என்று நினைக்கிறேன். நான் 2004 முதல் சென்னையில் விளையாடுகிறேன். அதனால்,இந்த கலாச்சாரத்தை நான் விரும்புகிறேன்.மேலும்,எனது அணியினரை நேசிக்கிறேன்.நான் அனிருதா ஸ்ரீகாந்த்,பத்ரிநாத், எல்.பாலாஜி ஆகியோருடன் விளையாடியிருக்கிறேன்.சி.எஸ்.கே.வில் சிறந்த நிர்வாகம் உள்ளது.நாங்கள் எங்களைக் கண்டுப்பிடித்துக் கொள்வதற்கான உரிமை உள்ளது.சென்னை கலாச்சாரத்தை நேசிக்கிறேன்.எனவே,சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்”, என்று கூறினார்.

நெட்டிசன்கள் எதிர்ப்பு:

இதனையடுத்து,சுரேஷ் ரெய்னா,தன்னை ஒரு பிராமணன் என அடையாளப்படுத்திக் கொண்டு பேசியதால்,கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் என பலரும் ரெய்னாவின் கருத்துக்கு எதிராக தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

அந்த வகையில்,ரெய்னாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் டுவிட்டரில் ஒரு பயனர்,”நீங்கள் வெட்கப்பட வேண்டும்,பல ஆண்டுகளாக சென்னைக்காக விளையாடிய போதிலும் நீங்கள் உண்மையான சென்னை கலாச்சாரத்தை அனுபவித்ததில்லை என்று தெரிகிறது” ,என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து,மற்றொருவர் கூறியதாவது,”வீடியோவைப் பார்த்தேன், நான் ஒரு முறை ரெய்னாவை மிகவும் விரும்பினேன்.ஆனால், எவ்வளவு அறியாமையில் இருந்துள்ளேன் என்று இப்போது புரிகிறது.அவர் இத்தகைய எண்ணங்களை இவ்வளவு நாட்களாக மறைத்துள்ளார் என்பது வருத்தமாக இருக்கிறது.அவருக்கு இனி மரியாதை இல்லை”,என்று தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா:

கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட்டில் முதன்முதலாக ரெய்னா களமிறங்கி,அறிமுகமான போட்டியிலேயே சதமடித்து அசத்தினார்.இவர்,ஒருநாள், டெஸ்ட் மற்றும் சர்வதேச டி-20 ஆகிய போட்டிகளில் 100 ரன்கள் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் ஆவார்.2011 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் ஒரு பகுதியாக இருந்தார்.

தோனி இல்லாத மூன்று போட்டிகளில் சென்னை சூப்பர்கிங்சின் அணித் தலைவராக இருந்தார்.அப்போது,மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வெல்ல அணிக்கு உதவினார்.2011 ஐபிஎல் போட்டிகளில், 438 ரன்கள் எடுத்து,அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்.அதனைத் தொடர்ந்து ஏழு தொடர்களில் 400 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரராக ரெய்னா உள்ளார்.ரெய்னா தனது 23 வயதில் இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற இரண்டாவது இளம் வயது வீரர்.

50 ஓவர் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, ஐ.பி.எல், சாம்பியன் லீக் உள்ளிட்ட போட்டித் தொடர்கள் அனைத்திலும் சதமடித்த ஒரே இந்திய வீரர் ரெய்னாதான்.மேலும்,இவர் சர்வதேச டி-20 போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரரும் ஆவார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.மேலும்,தனிப்பட்ட காரணங்களால் அவர் இந்தியன் பிரீமியர் லீக்கிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.