வட மாநிலங்களில் இருந்து பொருட்களை கொள்முதல்-ஓபிஎஸ் கண்டனம்..!

வட மாநிலங்களில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்திருப்பதும், பொட்டலங்களில் இந்தி வார்தைகள் இடம்பெற்றிருப்பதும் கண்டனத்திற்குரியது

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’, ‘சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ்’, ‘இந்திய ஆட்சி மொழியாக தமிழ்’, ‘தமிழில் அர்ச்சனை’, ‘இருமொழிக் கொள்கை’, ‘இந்தித் திணிப்பு எதிர்ப்பு’ என தமிழ் மீது மிகுந்த பற்றுடையது போல் காண்பித்துக் கொள்ளும் தி.மு.க., தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பில் உள்ள பொருட்களை வட மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்திருப்பதும், அந்தப் பொட்டலங்களில் இந்தி வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரொக்கத்துடன் கூடிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், 2022-ஆம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளுக்கு துணிப் பையுடன் கூடிய வெறும் 21சமையல் பொருட்கள் மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் தமிழ்நாட்டு மக்கள் உற்சாகமிழந்து காணப்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், இந்தப்பொருட்கள் வழங்குவதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்ததையடுத்து, நானும் அந்தக் குளறுபடிகளை 7-1-2022 நாளிட்ட எனது அறிக்கையின் வாயிலாக சுட்டிக்காட்டினேன்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிக்கை என்று குறிப்பிட்டு 9-1-2022 அன்று ஒரு செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வெளியீட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவதை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்ததாகவும்; மக்களிடையே வரவேற்பினைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தைப் பற்றி சிலர் தவறான, விஷமத்தனமான கருத்துகளை பரப்பி வருவதாகவும்; அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 முதலமைச்சர் அவர்கள் கூறுவதுபோல் தவறான கருத்துகளை யாரும் பரப்பியதாகத் தெரியவில்லை. தரமற்ற பொருட்கள், எடை குறைவு, பொருட்களின் எண்ணிக்கை குறைவு துணிப்பை வழங்காமை என பல்வேறு உண்மை நிகழ்வுகளைத்தான் மக்கள் எடுத்துக் கூறினார்கள். அதற்கான வீடியோ ஆதாரமும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. மற்றுமொறு குறை என்னவென்றால், பெரும்பாலான பொருட்கள் வட மாநிலங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும்தான் கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன.

உதரரணமாக ஆட்டா மரவு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள Surya Wheat Roller Flour Mills என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் பொட்டலத்தில் இந்தி, ஆங்கிலம், கன்னடம், தமிழ் ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன. ரவை உத்தரப்பிரதேச மாநிலம் ரைபரேலியில் உள்ள Kanha Flour Mills Pvt. Ltd. என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டும் இடம் பெற்றுள்ளன. தமிழில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan