வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பான பாமகவின் போராட்டம் தொடரும் – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசு உடனடியாக புள்ளி விவரங்களை எடுத்து மீண்டும் சட்டம் இயற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாமக, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது, வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்றும்  ஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தர வேண்டும் எனவும் கூறி வன்னியர் உள் இடஒதுக்கீடு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. வன்னியர் உள் ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் கூறிய 7 காரணங்களில் 6 காரணத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஆணையம் ஒன்றை அமைத்து புள்ளிவிபரங்களை திரட்டி மீண்டும் சட்டம் கொண்டு வர வேண்டும். வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பான பாமகவின் போராட்டம் தொடரும் என்றும் போதுமான அளவு தரவுகள் இல்லாததே தீர்ப்பு சாதகமாக இல்லாததற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்