தேர்தல் விதிமுறைகளை மீறுகிறாரா பிரதமர் மோடி.? மதத்தை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம்.!

PM Modi : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு பிரித்து கொடுத்து விடுவார்கள் என பிரதமர் மோடி பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது.

நாட்டில் உள்ள 543 தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் , புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 19இல் ராஜஸ்தான்  மாநிலத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்தது.

அதனை தொடர்ந்து, வரும் ஏப்ரல் 26ஆம் தேதி 2ஆம் கட்ட தேர்தலில் ராஜஸ்தானில் மீதமுள்ள 12 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சார வேளைகளில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாஜக – காங்கிரஸ் நேரடியாக களம் காணும் மாநிலம் என்பதால் பிரச்சாரங்கள் அனல் பறக்கிறது.

பிரதமர் மோடியின் பிரச்சாரம் :

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கையில் அவர் கூறிய கருத்துக்கள் எதிர்கட்சியினரிடையே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன. அவர் கூறுகையில், நாட்டில் உள்ள சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போதே கூறினார்கள். மக்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை காங்கிரஸ் கட்சி கணக்கு எடுப்பார்கள். பின்னர், அதனை அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மற்றவர்களுக்கு தர போகிறீர்களா.?

பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கூட கணக்கீடு செய்வோம் என தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. இப்படியான காங்கிரஸின் சிந்தனை தாய்மார்களின் தாலியை கூட விட்டு வைக்காது என்று கடுமையாக விமர்சனம் செய்தார் பிரதமர் மோடி.

தேர்தல் விதிமுறை :

தேர்தல் பிரச்சார விதிமுறையின்படி, அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தின் போது மத, இன ரீதியில் சர்ச்சைக்குரிய வகையில் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேச கூடாது என்பது பொதுவான விதியாக உள்ளது.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் :

மத ரீதியில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார் என எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமுக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில்,  முதல்கட்ட தேர்தல் முடிவுகளில் இந்தியா கூட்டணிக்கே வெற்றிவாய்ப்பு என்ற நிலை தெரிந்ததும் பிரதமர் மோடி பயத்தில் இவ்வாறு பேசி வருகிறார். மோடி பேசியது வெறுப்பு பேச்சு மட்டுமல்ல. மக்களை மதரீதியில் திசை திருப்பும் சூழ்ச்சி.

பதவிக்காக ஆதாரமற்ற பல்வேறு பொய்களை பிரதமர் கூறுகிறார். 140 கோடி மக்களும் இந்த பொய்யை நம்பப்போவது இல்லை. காங்கிரஸ் என்றுமே அனைவருக்கும் சமத்துவம் பற்றி பேசுகிறது. அனைவருக்கும் நீதியை பற்றி பேசுகிறது. காங்கிரஸ் நீதித்துறை உண்மையின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது. நாட்டில் உள்ள சர்வாதிகாரம் தற்போது குலுங்குகிறது.

இந்திய பிரதமர்களின் மோடி அளவுக்கு எந்த பிரதமரும், பிரதமர் பதவியின் கண்ணியத்தை இந்த அளவுக்கு குறைத்து இல்லை என கடுமையாக விமர்சித்தார் மல்லிகார்ஜூன் கார்கே. தமிழக திமுக அமைச்சர் P.T.R.பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் Rest In Peace.. Election Commission என்று பதிவிட்டு பிரதமரின் பேச்சுக்கு நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.