அவசர சட்டம் காலாவதியானது! சூதாட்டங்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்!

நிரந்தர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராத காரணத்தினால் ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்.

ஆன்லைன் ரம்மி தடைக்காக தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் நேற்றுடன் காலாவதியானது. அதே நேரத்தில், இதற்கான சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. செப்டம்பர் 26-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த அவசர சட்டத்துக்கு அக்டோபர் 1-ஆம் தேதி ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

பின்னர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் மசோதா தொடர்பாக சில விளக்கங்களை தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு தமிழக அரசு 24 மணிநேரத்தில் பதில் அளித்திருந்த நிலையில், ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்காக தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் நேற்றுடன் காலாவதியானது. நிரந்தர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராத காரணத்தினால் ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment