“விநாயகரைத் துதித்து நற்காரியங்கள்;வெற்றியே விளையும்” – ஓபிஎஸ் & ஈபிஎஸ் வாழ்த்து..!

நாளை நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு ஓபிஎஸ் & ஈபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது.இந்த நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் ‘விநாயகர் சதுர்த்தி’ திருநாள் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளனர்.

மேலும்,அந்த வாழ்த்து செய்தியில் அவர்கள் கூறியிருப்பதாவது:

“வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான ‘விநாயகர் சதுர்த்தி’ திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் நற்காரியங்களைத் தொடங்கும் போது, தங்குதடையின்றி சிறப்புடன் நடைபெற விநாயகப் பெருமானை முதலில் போற்றி வணங்குவர். விநாயகரைத் துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால் வெற்றியே விளையும் என்பது மக்களின் ஏகோபித்த நம்பிக்கையாகும்.

முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளாம் விநாயகர் சதுர்த்தி அன்று, களி மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து, அவருக்குப் பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, பழங்கள், கரும்பு போன்ற பொருட்களைப் படைத்து, அறுகம் புல், மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து விநாயகப் பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.

ஞானமே வடிவான திருமேனியைக் கொண்ட விநாயகப் பெருமானின் திருவருளால் உலகெங்கும் அன்பும், அமைதியும் நிறையட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும் என்று வாழ்த்தி, விநாயகர் சதுர்த்தித் திருநாளை விமரிசையாகக் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் ‘விநாயகர் சதுர்த்தி’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை அன்போடு உரித்தாக்கிக் கொள்கிறோம்”,என்று தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட மற்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.