தேர்தல் விதிமுறை மீறிய ஓ.பி.எஸ்.? 500 ரூபாயால் வந்த சிக்கல்.!

OPS : ராமநாதபுரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பின்போது ஒரு நபருக்கு சுயேச்சை வேட்பாளர் ஓபிஎஸ் 500 ரூபாய் பணம் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக  கூட்டணி ஆதரவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். முன்னதாக இரட்டை இலை சின்னம் கேட்டு, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு வந்த ஓபிஎஸ், நேற்று தனக்கு வாளி சின்னம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்து பின்னர் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி, மேற்கொண்டு வருகிறார். இன்று ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் பிரச்சாரம் செய்து வந்த ஓபிஎஸ் அவரது ஆதரவாளர் ஒருவர் குழந்தையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அந்த நபர் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு பின்னர், அந்த நபருக்கு 500 ரூபாய் பணத்தை ஓபிஎஸ் கொடுத்து உள்ளார் என தெரிகிறது. இந்த விவகாரம் சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. காரணம், வாக்காளர்களுக்கு எக்காரணம் கொண்டும் வேட்பாளர்கள் பணம், பரிசுப்பொருள் ஆகியவற்றை கொடுக்க கூடாது என்பது தேர்தல் விதி.

தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் சமயத்தில் ராமநாதபுரம் வேட்பாளர் ஓபிஎஸ் ஒரு நபருக்கு 500 ரூபாய் கொடுத்த விவகாரம் அவருக்கு சிக்கலை ஏற்ப்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டால், ஓபிஎஸ் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.