ஒரு தேசத்துக்கு இரு சட்டங்கள் இருக்கக்கூடாது… மக்களவையில் பிரதமர் மோடி உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அயோத்தி ராமர் கோவில் பற்றிய விவாதத்தை மத்திய அரசு நடத்த முடிவு செய்தது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு விவாதங்கள், வெளிநடப்புகள் என அரங்கேறியது.

இந்த நிலையில், ராமர் கோவில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார். அப்போது பிரதமர் பேசியதாவது, கடந்த 5 ஆண்டுகள் இந்திய நாட்டில் சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றத்தை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி முதலில் சிலருக்கு சிரமமாக இருந்தாலும், பிறகு அனைவருக்கும் பயனுள்ளதாக மாறியுள்ளது.

கொரோனா காலத்திலும் நம் நாட்டின் வளர்ச்சி தடைப்படவில்லை. உலகையே அச்சுறுத்திய கொரோனாவை எதிர்கொண்டு வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது. நடப்பு 5 ஆண்டு ஆட்சி காலத்தில் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கிடைத்துள்ளது. இந்தியா மீதான உலக நாடுகளின் நன்மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

மக்களவை தேர்தலுக்குள் சிஏஏ சட்டம் நடைமுறை – அமித்ஷா திட்டவட்டம்!

ஜி 20 உச்சி மாநாட்டை நடத்திய போது உலகமே நம்மை பார்த்தது. தகவல் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளோம். 17ஆவது மக்களவை 97 சதவிகிதம் செயல்பட்டது. ஆனால், இது போதாது இதை 100% ஆக செயல்படுத்த வேண்டும். ஒரு தேசத்திற்கு இரண்டு அரசமைப்பு சட்டங்கள் இருக்கக்கூடாது. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு தேவையான சமூகநீதி கிடைத்துள்ளது.

முத்தலாக் தடை சட்டமும், மகளிர் இட-ஒதுக்கீடும் இந்த அவையில் தான் நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் தடை சட்டம் நீக்கப்பட்டதால் இஸ்லாமிய பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டது. இதுபோன்று பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மத்திய அரசின் அனைத்து முடிவுகளும் பெண்களுக்கு சாதகமாக எடுக்கப்பட்டுள்ளன.

தேசத்தில் இளைஞர் சக்தியின் மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவோம். 100% அர்ப்பணிப்புடன் பணியாற்ற உறுதியேற்போம். 17வது மக்களவை கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளோம். மக்கள் மீண்டும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்த பிரதமர் மோடி, அனைத்து கட்சிகளின் மக்களவை குழு தலைவர்களும் நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment