அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1,000 ஊக்கத்தொகை இருக்காது – திமுக எம்பி கனிமொழி விளக்கம்

திமுக வாக்குறுதியான இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பற்றி திமுக எம்.பி கனிமொழி விளக்கம்.

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி சார்பில் தலைவர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி பயிலக்கூடிய 20 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு வழங்கினார்.

இதன்பின் பேசிய அவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் என்பது யாருடைய வேலையும் பறிக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது அல்ல. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் மூலம் காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பெரியாரின் வழிவந்த நமது முதல்வர் தற்போது அதனை நிறைவேற்றி உள்ளார்.

மேலும், ஆண்களை வீட்டில் இருக்கச் சொல்லி பெண்கள் வேலைக்கு செல்லும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது தான் நமது திமுகவின் ஆட்சி என தெரிவித்த அவர், அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 தேவை என்ற சூழல் இருக்காது என்றும் தகுதியுடையவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவித்ததாக எம்.பி கனிமொழி விளக்கமளித்துள்ளார்.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஏழ்மை குடும்பம் மட்டுமல்லாமல் தகுதியுள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டிப்பாக செயல்படுத்துவார் என்று தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்