புத்தாண்டு கொண்டாட்டத்தில் திளைத்த நெல்லை.. தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர்.!

உலகம் முழுக்க இன்று மக்கள் 2024 புத்தாண்டை மகிழ்ச்சியாய் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரை, புதுச்சேரி, வேளாங்கன்னி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகமலாக இருந்தது.

அதே போல சுற்றுலா தலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. குறிப்பாக சனி, ஞாயிறு கிழமைகளை தொடர்ந்து திங்கள் (இன்று) புத்தாண்டு விடுமுறை என்பதால் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு என பல்வேறு சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

2024 ஸ்டார்ட்ஸ்… புத்தாண்டை குதூகலத்துடன் வரவேற்ற பொதுமக்கள்…

திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், பாளையங்கோட்டை மறைமாவட்ட பேராயர் அந்தோணி சாமி சவரிமுத்து கலந்து கொண்டு திருப்பலி பிரார்த்தனை மேற்கொண்டார்.  இதுபோன்று கத்தீட்ரல் பேராலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனைகளில் கிறிஸ்தவ மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அதே போல திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலிலும் அதிகாலை முதலே சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட  வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மாநகர் முழுவதும் 560 போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் சுங்கச்சாவடி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் புத்தாண்டை முன்னிட்டு, நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் மீது எந்தவித கொண்டாட்டத்திற்கும் அனுமதியில்லை என காவல்துறையினர் மறுப்பு தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.