தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.! தமிழக அரசுக்கு பறந்த புதிய உத்தரவு.!

Thoothukudi Firing : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.? என உயர்நீதிமன்றம் கேள்வி.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது , கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் இந்த போராட்டம் மாபெரும் பெரும் போராட்டமாக மாறியது. இந்த போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், 21 பேர் மீது குற்றம் சாட்டியது. 17 காவல்துறை அதிகாரிகள், 3 வருவாய் துறை அதிகாரிகள், அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. அதில், இதுவரை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு அறிவித்த 20 லட்ச ரூபாய் இழப்பீடு தொகை மட்டுமே கொடுக்கப்பட்டது. மற்றபடி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தநிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் குற்றம் சட்டபட்ட அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, அதிகாரிகள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியது. இதனை அடுத்து, வரும் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி தமிழக அரசு அறிக்கையாக தயார் செய்து அதனை மனுதாரருக்கு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி அமர்வு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துவிட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.