மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் – தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மத்திய பாஜக அரசின் மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால், மக்களவை தேர்தலுக்கான பணியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையமும், மறுபக்கம் அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Read More – ராகுல் காந்தியின் ஒற்றுமை நியாய யாத்திரை நிறைவு.! மும்பைக்கு விரையும் தலைவர்கள்…

அதன்படி, சமீப காலமாக நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் மாநில தேர்தல் ஆணையர்களுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தது. அதேசமயம், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மாநிலங் கட்சிகளும் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பரப்புரை, வேட்பாளர் தேர்வு என பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.

Read More – மதுபான கொள்கை வழக்கு.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்…!

ஆனால், மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்ததால், பல்வேறு கேள்விகள் எழுந்தது. எனினும், 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது. இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

Read More – இன்று வெளியாகிறது மக்களவை, 4 சட்டமன்றங்கள் மற்றும் இடைத்தேர்தல் தேதிகள்..

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல்  7 கட்டங்களாக நடைபெறும் என்றும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் மற்றும் ஒருசில வடமாநிலங்களில் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26, மூன்றாம் கட்டம் மே 7, நான்காவது கட்டம் மே 13, ஐந்தாம் கட்டம் மே 20, ஆறாவது கட்டமாக மே 25, ஏழாவது கட்டமாக ஜூன் 1ஆம் தேதியும் தேர்தல் தேதி நடைபெறுவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

எனவே, ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இதனிடையே அவர் கூறியதாவது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராகி உள்ளது. இந்தாண்டில் நடைபெறும் மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்பு இதுதான். ஒவ்வொரு தேர்தலும் சவால் நிறைந்தது தான். நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வரும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. 1.5 கோடி அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தலுக்காக 2100 பார்வையாளர்கள் நாடு முழுவதும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பணம் பலம், ஆள் பலம், வதந்திகள், விதிமீறல் ஆகியவை தேர்தல் ஆணையம் முன் உள்ள 4 சவால்களாகும்.

எனவே, வன்முறை இன்றி மிகவும் அமைதியாக தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment