உள்ளாட்சித் தேர்தல் : ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை

  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 
  • உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில்  நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை  ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதன் பின்னர் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி உள்ளாட்சித்  தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில்   ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என்றும்  யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர்,கொடி ,ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது திருச்சி ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவோ, ஆதரவாகவோ வாக்கு சேகரிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் சிலர் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானதை அடுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.