கூடங்குளம் அணுக்கழிவுகள்: பிரதமர் மோடிக்கு எம்.பி டி.ஆர்.பாலு கடிதம்…!

கூடங்குளம் அணுக்கழிவுகளை அணுமின் நிலையத்திலேயே சேமித்து வைக்க அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணுக்கழிவுகளை அணுமின் நிலையத்திலேயே சேமித்து வைக்க அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அளித்த உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற திமுக உறுப்பினர்(எம்பி) டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சேமிக்கப் படும் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் கடந்த 23.07.2021 அன்று அனுமதி அளித்துள்ளது வேதனை அளிக்கிறது.

அணுசக்தி ஆலை தளத்தில் செலவழித்த அணு எரிபொருளை (எஸ்என்எஃப்) சேமித்து வைப்பது, மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்து,அதனை பாதுகாப்பான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். போதுமான கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்று கடந்த 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்,இந்திய அணுசக்தி கழகம் அளித்த இந்த அனுமதி, உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவதாக உள்ளது.,கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கும்போது, அணுக்கழிவுகள் ரஷ்யா அனுப்பப்படும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.ஆனால்,ரஷ்யா தனது நாட்டில் அணுக்கழிவுகளை கையாள்வதில் பல சிக்கல்களை எதிர்கொண்டதால் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கழிவுகளை திரும்பப் பெறாது என்பது இப்போது புரிகிறது,எனவே,தற்போது கூடங்குளம் தளத்தில் அணுக்கழிவு மையம் உருவாக்கப்படுகிறது.இதனால்,ஏற்படும் அணு கதிர்வீச்சு  மக்களிடையே தொடர்ந்து அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

ஏனெனில்,ஜப்பான்,அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆய்வில் அணுக்கழிவுகளை அதே வளாகத்திற்குள் சேமிப்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிய வந்துள்ளது.

எனவே,இவற்றைக் கருத்தில் கொண்டு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணுக்கழிவுகளை அணுமின் நிலையத்திலேயே சேமித்து வைக்க அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அளித்த உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்”,என்று வலியுறுத்தியுள்ளார்.