சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுங்கள் – ஜிகே வாசன்

கொரோனா பாதிப்பில் இருக்கும் மக்களின் நலன் கருதி சிலிண்டர் விலையை ஏற்றாமல் இருக்க வேண்டும் என ஜிகே வாசன் வலியுறுத்தல்.

சாமானிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.15 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது அனைத்து தரப்பு மக்களையும் குறிப்பாக சாதாரண மக்களைப் பெருமளவு பாதிக்கும். தற்போதைய கொரோனா காலத்தில் வருமானம் போதுமான அளவில் கிடைக்காத சூழலில் அன்றாட வாழ்க்கைக்கே பொருளாதாரம் தேவையான அளவிற்கு இல்லை. அப்படி இருக்கும் போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை சமாளிப்பது சற்று கடினம் என தெரிவித்தார்.

எனவே, மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தைக் காரணம் காட்டி, மாதந்தோறும் விலை உயர்த்தினால் அது சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக அமையும்.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறவும், இனியும் விலையேற்றப்படாமல் நிலைத்த தன்மைக்கும் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்