கோடநாடு வழக்கு – ஜெயலலிதா உதவியாளரிடம் விசாரணை!

கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா உதவியாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக யார், யாரிடம் விசாரிக்கப்படாமல் இருந்தார்களோ, அவர்களை தற்போது தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை சசிகலா, விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி,  சஜீவன் உள்ளிட்ட 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 15 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் உதவியாளராக பூங்குன்றன் இருந்துள்ள நிலையில், முதல்முறையாக கோடநாடு வழக்கில் விசாரணை நடத்தப்படுகிறது.

கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்