கே.எல் ராகுல் & ஜடேஜா 2-வது டெஸ்டில் இருந்து விலகல்- பிசிசிஐ அறிவிப்பு..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் பிப்ரவரி 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி  மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் விக்கெட் கீப்பர் கே.எல் ராகுல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல் ராகுல் ஆகிய இருவரும் விலகியுள்ளனர் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

அவர்களுக்குப் பதிலாக சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், சௌரப் குமார் ஆகிய மூன்று வீரர்கள்  இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தின் போது ஜடேஜாவுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது, அதே நேரத்தில் ராகுல் வலது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது.

புஜாராவுக்கு கிடைக்காத வாய்ப்பு! கில்லுக்கு அட்வைஸ் கொடுத்த அனில் கும்ப்ளே!

இதனால் 2-வது போட்டியில் இருவரும் விலகியுள்ளதாகவும் அவர்கள் தொடர்ந்து சிகிக்சை எடுத்து வருவதாகவும்  மருத்துவக் குழு அவர்களை கண்காணித்து வருகிறது என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1, 2024 அன்று அகமதாபாத்தில் தொடங்கும் இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணியில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக சரண்ஷ் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவேஷ் கான் ரஞ்சி டிராபி அணியான மத்தியப் பிரதேசத்துடன் தொடர்ந்து விளையாடி வருவார் எனவும் தேவைப்பட்டால் டெஸ்ட் அணியில் இணைவார் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: 

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், சௌரப் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
murugan

Leave a Comment