#KKR v SRH: மீண்டும் தடுமாற்றம்… ஹைதராபாத்தை 115 ரன்களில் சுருட்டிய கொல்கத்தா!

ஐபிஎல் தொடரின் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 115 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இன்றைய தினத்தின் இரண்டாவது ஆட்டமான 49வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகள் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய் 10 ரன்களிலும், விருத்திமான் சாஹா ரன் எதும் அடிக்காமல் இருவரும் விக்கெட்டை இழந்தனர். இதன்பின் கேப்டன் கேன் வில்லியம்சன், ப்ரியம் கார்க் ஆகியோர் நிதானமாக விளையாடி வந்த நிலையில், வில்லியம்சன் 26 ரன்களில் ரன் அவுட்டாக, கார்க் 21 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இவர்களை தொடர்ந்து அப்துல் சமத் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீர்ரகள் கொல்கத்தா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தாவில் சிறப்பாக பந்துவீசிய டிம் சவுத்தி, சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். சிறப்பான பந்துவீச்சு காரணமாக ஹைதராபாத்தை 115 ரன்களில் கொல்கத்தா சுருட்டியதால், 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்